யாழில் தனியாருக்கு விற்கப்பட்ட இடுகாடு!

  

agp win tamil news/யாழில் தனியாருக்கு விற்கப்பட்ட இடுகாடு/Cemetery sold to a private individual in Jaffna

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன.


 அத்துடன் அப்பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் உடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த இடுகாட்டிலையே புதைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.



   இந்நிலையில் குறித்த இடுகாடு அமைந்துள்ள காணியை அண்மையில் தான் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அது தனக்கு சொந்தமானது என கூறி, கல்லறைகளை அகற்றி விட்டு, அதில் சுற்றுலா மையம் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் ஒருவர் அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.



 இது தொடர்பில் பிரதேச செயலரிடம் தெரிவித்த நிலையில் , குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது எனவும் , இடுகாட்டுக்காக இனிவரும் மூளாய் பகுதியில் 2 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


எமது உறவுகளின் கல்லறைகள் இந்த இடுகாட்டில் உள்ளது அதனை ஒருவர் அழித்து அதன் மீது சுற்றுலா தளம் ஒன்றினை அமைப்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனவே எமது இடுகாட்டையும் எம் உறவுகளின் கல்லறைகளையும் பாதுகாத்து தாருங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Jaffna Tamil News