ஞாயிற்றுக்கிழமை அறநெறிப் பாடசாலை நேரத்தில் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய தரங்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் ஏதேனும் முடிவையோ அல்லது ஒழுங்குமுறையையோ எடுத்ததா என்றும் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து, அதற்கு பதிலளித்த பிரதமர், இது தொடர்பாக மதத் தலைவர்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் காலத்தில் அதற்கேற்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் பயிற்சி வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சிடம் தற்போது எந்த கொள்கையும் இல்லை என்றும் பிரதமர் ஹரிணி குறிப்பிட்டுள்ளார்.